176 பேர் பயணித்த உக்ரைன் பயணிகள் விமானத்தை தவறுதலாக சுட்டுவிட்டோம் என ஈரான் அதிபர் ஹசன் ருஹானி தெரிவித்துள்ளார். இது உலக நாடுகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஈரான்-அமெரிக்க நாடுகளுக்கு இடையில், போர் மேகம் சூழ்ந்திருந்த நேரத்தில், உக்ரைன் பயணிகள் விமானம் ஈரான் நாட்டில் விபத்துக்குள்ளானது. ஈரானின், டெஹ்ரான் விமானநிலையத்தில் இருந்து, கடந்த 8-ம் தேதி காலை கிளம்பிய உக்ரைன் விமானத்தில் 176 பேர் பயணித்தனர். திடீரென விமானம் விபத்துக்குள்ளானதில், விமானத்தில் பயணம் செய்த 176 பேரும் பலியானார்கள்.
இதையடுத்து விமான விபத்து பற்றி தகவல் வெளியிட்ட ஈரான் அரசு, இயந்திரக் கோளாறு காரணமாக விபத்து நடைபெற்றதாகக் குறிப்பிட்டது. விமான விபத்தில் பலியானவர்களில், 63 பேர் கனடா நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதால், இந்த விவகாரம் குறித்து கனடா தீவிர விசாரணை நடத்தியது. அதில், உக்ரைன் விமானம் விபத்துக்கு உள்ளாகவில்லை. ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில்தான் விமானம் வீழ்த்தப்பட்டது என்பதற்கான ஆதாரங்கள் கிடைத்தன.
அவற்றை கனடா அரசு வெளியிட்டது. இதையடுத்து எங்களிடமும் இதற்கான ஆதாரங்கள் உள்ளன என அமெரிக்காவும் தெரிவித்தது. ஆனால், அப்போது அதை கடுமையாக மறுத்த ஈரான், எங்கள் மீது குற்றச்சாட்டு சொல்பவர்கள், அதற்கான ஆதாரங்களை வெளியிட வேண்டும் என்று தெரிவித்தது. இப்படி விமான விபத்துத் தொடர்பான சர்ச்சைகள் நீடித்த நிலையில், இன்று ஈரான் அதிபர் ஹசன் ருஹானி, உக்ரைன் விமானம் ஈரான் ஏவுகணையால் தவறுதலாக சுட்டு வீழ்த்தப்பட்டு விட்டது.
மன்னிக்க முடியாத தவறாக நடந்துவிட்ட இந்தச் சம்பவம் குறித்து உரிய விசாரணை நடக்கிறது என்று தெரிவித்துள்ளார். இது உலக நாடுகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.