திமுக ஆட்சிக்கு வந்த இரண்டே மாதத்தில் காணாமல் போன வாய்க்கால்

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் அதிமுக ஆட்சியில் 60 லட்ச ரூபாய் ஒதுக்கி தூர்வாரப்பட்டு பராமரிக்கப்பட்ட வாய்க்கால் திமுக ஆட்சிக்கு வந்த இரண்டு மாதத்தில் மாயமாக மறைந்து விட்டதாக காவல்நிலையத்தில் விவசாயிகள் அளித்துள்ள புகார் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

வேடசந்தூர் அருகே கிரியம்பட்டி ஆற்றின் குறுக்கே வெங்கட்ராமன் அய்யங்கார் அணைக்கட்டு உள்ளது.

இங்கிருந்து செல்லும் பாசன வாய்க்கால் அதிமுக ஆட்சியில் கடந்த ஆண்டு குடிமராமத்து பணி திட்டத்தின் கீழ் 25 லட்சம் ரூபாய் செலவில் மூன்று கிலோமீட்டருக்கு தூர்வாரப்பட்டது.

ஆனால், கோட்டையூர் அருகே தனியார் நூற்பாலை நிறுவனம் பாசன வாய்க்காலை சமன்படுத்தி ஆக்கிரமித்து கட்டுமானப் பணியில் ஈடுபட்டு வருவதால், பாசன வாய்க்கால் இருந்த இடமே தெரியாத அளவுக்கு சென்றுவிட்டதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

இதேபோல லட்சுமணம்பட்டி அணைக்கட்டில் இருந்து செல்லும் இடதுபுற பாசன வாய்க்கால் கடந்த ஆண்டு 35 லட்ச ரூபாய் செலவில் தூர்வாரப்பட்டதாகவும், ஆனால் அய்யனார் நகரில் பாசன வாய்க்காலை சமன்படுத்தி வீடுகள் கட்டப்பட்டு விட்டதாகவும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

 

கடந்த 2 மாதங்களில் ஆக்கிரமிப்பால் பாசன வாய்க்கால்கள் காணாமல் போனது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் நீர்வள ஆதாரத் துறையினரிடம் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது விவசாயிகளின் புகார்.

எனவே மாயமான வாய்க்காலை கண்டுபிடித்து தரவேண்டும் என்று வேடசந்தூர் காவல் நிலையத்தில் விவசாயிகள் புகார் அளித்துள்ளனர்.

Exit mobile version