காணாமல் போன கார் – சரியான நேரத்தில் உதவிய “Fastag" ஸ்டிக்கர்

புனேவில் காணாமல் போன காரை “Fastag” ஸ்டிக்கர் உதவியுடன் காவல்துறையினர் மீட்டுள்ளனர்.

இந்தியாவில் உள்ள தேசிய  நெடுஞ்சாலைகளின் டோல்கேட்டில் கடந்த டிசம்பர் 15-ம் தேதி முதல் FASTAG எனப்படும் மின்னணு அட்டை அறிமுகம் செய்யப்பட்டது. இதன்மூலம் நமது வாகனங்களில் FASTAG ஸ்டிக்கர் ஒட்டப்படும். இதற்கு ரீசார்ஜ் செய்து நாம் ஒவ்வொரு முறையும்  டோல்கேட்டை கடக்கும் போது அந்த ஸ்டிக்கரில் உள்ள குறியீட்டு எண்ணை ஸ்கேன் செய்து அதிலிருந்து பணம் வசூலிக்கப்படும்.  மேலும் ஒவ்வொரு முறையும் பணம் எடுக்கும்போது குறிப்பிட்ட செல்போன் எண்ணுக்கு குறுந்தகவல் வரும். இதனால் டோல்கேட்டில் கால விரயம், சில்லறை போன்ற பிரச்சனைகள் இல்லாமல் நிம்மதியாக பயணிக்கலாம்.

இந்நிலையில் புனேவைச் சேர்ந்த ராஜேந்திர ஜாக்டேப்  என்ற நபர் வீட்டு வாசலில் நிறுத்தி விட்டு இரவு தூங்கச் சென்றுள்ளார். அதிகாலையில் அவர் செல்போனுக்கு மெசெஜ் ஒன்று வந்துள்ளது. அதில் தெலகான் நெடுஞ்சாலையின் டோல்கேட்டில் அவரது FASTAG அக்கவுண்டில் இருந்து பணம் எடுக்கப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால் தூக்கத்தில் இருந்த ராஜேந்திர ஜாக்டேப் அதனை சரியாக பார்க்கவில்லை. பின்னர் காலை 6 மணியளவில் மீண்டும் அவர் செல்போனுக்கு பன்வேல் சுங்கச்சாவடியில்  கட்டணம் வசூலிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இதனைப் பார்த்த  ராஜேந்திர ஜாக்டேப் அதிர்ச்சியடைந்தார்.

காரணம் வீட்டுவாசலில் நிறுத்தப்பட்டிருக்கும் காருக்கு எப்படி கட்டணம் வசூல் செய்ய முடியும் என்ற குழப்பத்தில் வீட்டு வாசலுக்கு சென்று பார்த்த போது அவரது கார் திருடு போனது தெரிய வந்தது. உடனடியாக காவல் நிலையம் சென்று தகவல் கொடுத்த ஜாக்டேப் தனது காரில் பொறுத்தப்பட்ட ஜிபிஎஸ் வசதியை கொண்டு கார் செல்லும் வழியை கண்டுபிடித்தார். இதுதொடர்பாக குறிப்பிட்ட எல்லைக்குள் இருக்கும் காவல் நிலையத்துக்கு உடனே தகவல்கொடுத்த காவல் துறையினர் காரை மீட்டுள்ளனர்.

Exit mobile version