நாம் எத்தனையோ மனிதர்களை நம் வாழ்க்கையில் கடந்து செல்கிறோம்.. சிலர் தான் நம்மைக் கவனிக்க வைக்கிறார்கள்.. அந்த சிலர்தான் நம் வாழ்கையை சந்தோஷப் படுத்துகிறார்கள்.. அப்படிப்பட்ட ஒருவர்தான் The One And Only கிரேஸி மோகன்..
மோகன் எப்போது கிரேஸி மோகன் ஆனார் என்பது ஒரு தனி கதை.. கிரேஸி தீவ்ஸ் இன் பாலவாக்கம் என்ற நாடகம் தான் மோகனை கிரேஸி மோகனாக்கியது.. இந்த நாடகம் அந்த காலத்தில் பரவலாக பலராலும் பாராட்டப்பட்ட நாடகம் .. அதுமட்டுமல்லஇவரது ’மேரேஜஸ் ஆர் மேட் இன் சலூன்’ என்ற நாடகம் கிரேஸி மோகனின் மாஸ்டர் பீஸ்…
இந்த நாடகத்தைப் பார்த்த கே.பாலச்சந்தர் நாடக உலகில் கோலோச்சியிருந்த கிரேஸி மோகனை சினிமாவுக்கு இழுத்து வந்து பொய்கால் குதிரையில் வசனம் எழுத வைத்தார். பொய்க்கால் குதிரையில் மோகனின் வசனத்தை மக்கள் ஏற்றக் கொண்டார்கள்.. சினிமா வசனகர்த்தாவாக அவதாரமெடுத்தார்.. பிள்ளையார் சுழி போட்டது பாலச்சந்தருடன் என்றாலும் அவருடைய சினிமா பயணம் கமலுடன்தான் அதிகளவில் பயணப்பட்டது… சினிமாவில் நிறைய படங்களுக்கு கிரேஸி மோகன் வசனம் எழுதியிருந்தாலும், கமல்-கிரேஸி மோகன் காம்பினேஷன் தான் அதிகளவில் கைதட்டல் வாங்கியது.
அபூர்வ சகோதரர்கள் ஒரு ரகம் என்றால்.. அதை அள்ளி சாப்பிடும் விதமாக மைக்கேல் மதன காமராஜன் இன்னொரு ரகமாக இருக்கும். ஆனாலும் சதிலீலாவதி தான் எவர்கிரீன் காமெடி காம்போ. இதுதான் கிரேஸி மோகன்.. ஒரு தலைமுறை மட்டுமல்லாது, பல தலைமுறைகளைத் தாண்டியும் ரசிகர்களை தன் கட்டுக்குள் வைத்திருப்பவனே உண்மையான கலைஞன் என்றால் கிரேஸி ஒரு உண்மையான நல்ல கலைஞன்.
நடிகராக, வசனகர்த்தாவாக, நாடக ஆசிரியனாக, இயக்குனராக என பல்வேறு முகத்துக்குச் சொந்தக்கார மோகன் ஒரு நல்ல ஓவியர் என்பது நம்மில் பலருக்கும் தெரியாத நிஜம். நாடக உலகில் தன் தம்பி மாதுவோடு இவர் நடத்திய பல்வேறு நாடகங்கள் சக்கை போடு போட்டது. உள்ளூர் மற்றும் வெளியூரிலும் கூட அரங்குகள் நிறைந்த காட்சிகளாகத் தான் காணப்பட்டன.. சலிக்க சலிக்க சாக்லேட் கிருஷ்ணாவை பலமுறை மேடையேற்றியபோதும் சலிக்காமல் கண்டுகளித்தனர் கிரேஸி மோகன் என்ற ஒரே ஒரு படைப்பாளிக்காக.
நாடக உலகில் ஒரு வெற்றிடம்.. சினிமா உலகில் ஒரு வெற்றிடம் மட்டுமல்ல.. இலக்கிய உலகிலும் ஒரு வெற்றிடம் ஆம்..! தினந்தோறும் ஒரு வெண்பா வீதம் எழுதி இதுவரை நாற்பதாயிரம் வெண்பா எழுதியிருக்கிறார். கலை இலக்கியத்துக்காக கலைமாமணி விருதும் பெற்றார் கிரேஸி மோகன்..
முன்னாடி பின்னாடி என கண்ணாடி காமெடியை பஞ்சதந்திரத்தில் சொல்லி பலருக்கும் வயிற்று வலியை ஏற்படுத்திய பெருமை மட்டுமல்லாது , திரிபுர சுந்தரிக்கும் காமேஷ்வரனுக்கும் உள்ள காதலை காமெடியாக திரையில் உலாவ விட்டவர். அந்த சினிமா உத்தியை அதற்கு பின்பு வந்த பல படங்களில் பல இயக்குனர்கள் காப்பி அடித்தார்கள். எவர் தன்னுடைய கற்பனையை காப்பியடித்தாலும் எதற்கும் கலங்காமல் அள்ள அள்ள குறையாத அமுதசுரபி போல தன் கற்பனைக் குதிரையை ஓடவிட்டு பல ஹிட்டடித்தவர்…
அவ்வை சண்முகி, வசூல்ராஜா எம்பிபிஎஸ் , சதிலீலாவதி, பஞ்ச தந்திரம் போன்ற இந்த படங்களில் கமல் எந்த அளவிற்கு உயர்ந்து நின்றாரோ அதே அளவிற்கு தன் வசனத்தால் கிரேஸியும் உயர்ந்து நின்றார் என்பது நிதர்சனமான உண்மை.
காலத்தின் பக்கங்களில் இன்றைய தினம் கருப்பு தினம்.. பலரையும் சிரிக்க வைத்து சிந்திக்க வைத்த கலைஞன் இம்மண்ணை விட்டு மறைந்த தினம்.எப்போதாவது தான் இதுமாதிரி மனிதர்கள் பிறக்கிறார்கள்.வரலாறு படைக்கிறார்கள்.ஒரு நாள் நம்மை விட்டு மறைந்தும் செல்கிறார்கள்…
இன்றைக்கு கிரேஸி மோகன்…
மிஸ் யூ கிரேஸி மோகன்…Sorry சாக்லேட் கிருஷ்ணா…