கைலாச மானசரோவர் யாத்திரை மேற்கொள்ளும் இந்தியர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து தரச் சீனா ஒப்புக்கொண்டுள்ளது.
சீனாவின் திபெத்தில் அமைந்துள்ள கைலாச மானசரோவருக்கு இந்தியர்கள் ஆண்டுதோறும் புனிதப் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் சீனாவுக்கு மூன்றுநாள் அரசுமுறைப் பயணமாகச் சென்ற இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங்க் உடன் பேச்சு நடத்தினார். அப்போது, கைலாச மானசரோவருக்குச் செல்லும் இந்தியர்களுக்குத் தேவையான வசதிகள் செய்து தரப்படும் எனச் சீன அமைச்சர் உறுதியளித்தார். எல்லைப் பகுதிகளில் கலாசார நிகழ்ச்சிகள், மருத்துவ முகாம்கள், திரைப்பட விழாக்கள் நடத்துவது, மானசரோவருக்குப் பக்தர்கள் செல்வதற்குப் புதிய பாதையைத் திறந்து விடுவது உள்ளிட்டவை குறித்தும் இருநாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்கள் சந்திப்பின்போது பேசப்பட்டது.