கலசப்பாக்கம் தொகுதியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் சிறப்புப் பரிசுத் தொகுப்புடன் ஆயிரம் ரூபாய்த் தொகையைச் சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் வழங்கினார். கலசப்பாக்கம் வட்டத்தில் 37 ஆயிரத்து 198 குடும்பங்களுக்குப் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட உள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் தமிழக அரசு சார்பில் ஒரு லட்சம் குடும்ப அட்டைகளுக்குப் பொங்கல் பரிசுத் தொகுப்புகளை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வழங்கினார். இதில், மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, அதிமுக சட்டமன்ற உறுப்பினர் தூசி மோகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம் காமராஜபுரத்தில் உள்ள நியாய விலைக்கடையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் விழா நடைபெற்றது. இதில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டு தகுதிவாய்ந்த 4 லட்சத்து 53 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்குப் பொங்கல் பரிசுத் தொகுப்புகளை வழங்கினார்.
நீலகிரி மாவட்டத்தில் கூட்டுறவு துறை மூலம் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா மற்றும் சட்டமன்ற உறுப்பினர் சாந்தி ராமு ஆகியோர் 24 கோடியே 42 லட்சம் மதிப்பிலான பொங்கல் பரிசுப் பொருட்களை 2 லட்சத்து 12 ஆயிரத்து 323 குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கினர்.
வேலூர் மாவட்டம், வடுகந்தாங்கலில் பொங்கல் பரிசு வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவில் வணிக வரி மற்றும் பத்திரபதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி கலந்துகொண்டு, மக்களுக்கு ஆயிரம் ரூபாய் மற்றும் பொங்கல் பரிசுப் பொருட்களை வழங்கினார். அதைத் தொடர்ந்து பேசிய அவர், அரசு என்ன நிதி நெருக்கடியில் இருந்தாலும், மக்கள் நலத் திட்டங்களைச் சரியாகச் செயல்படுத்தி வருவதாகத் தெரிவித்தார்.
ஈரோடு மாவட்டம் தாளவாடியில் பவானிசாகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் பொதுமக்களுக்குப் பொங்கல் சிறப்பு பரிசை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் தாளவாடி வட்டாட்சியர், அரசு அதிகாரிகள், அதிமுக நிர்வாகிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
தருமபுரி மாவட்டத்தில் 4 லட்சத்து 25ஆயிரம் குடும்பஅட்டைதாரர்களுக்குப் பொங்கல் சிறப்பு பரிசுத் தொகுப்பு வழங்கப்பட உள்ளது. அதியமான்கோட்டையில் நடைபெற்ற விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பங்கேற்றுப் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கித் தொடங்கி வைத்தார்.
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த தம்பிரான்குடிக்காட்டில் பொங்கல் சிறப்புப் பரிசுத் தொகுப்புகளைக் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பயனாளிகளுக்கு வழங்கினார். அப்போது பேசிய அவர் ஏழை மக்களின் நலன் காக்கும் அரசு அதிமுக அரசு எனத் தெரிவித்தார்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் நடைபெற்ற விழாவில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி பொதுமக்களுக்குப் பொங்கல் பரிசு மற்றும் ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை வழங்கினார். தென்காசி மாவட்டத்தில் மொத்தம் 4 லட்சத்து 10 ஆயிரம் குடும்பங்களுக்குப் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட உள்ளது.