கோவை கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக மாறியுள்ளதாகவும், 280 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். கொரோனா தடுப்பு சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் அவர்கள் கேட்டறிந்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், கொரோனா தொற்றை தடுக்க மத்திய சுகாதாரத்துறை வழிகாட்டுதல்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறினார். தமிழகம் முழுவதும் மருத்துவர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றி வருவதாக அமைச்சர் விஜயபாஸ்கர் பாராட்டு தெரிவித்தார்.
தற்போது, கொரோனா வைரஸின் வீரியம் அதிகரித்துள்ளதை உணர்ந்து, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் போது, அவர்களுக்கு உடனடி சிகிச்சை அளிக்கும் வகையில், தமிழகத்தில் அனைத்து மருத்துவமனைகளிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.