சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற அமைச்சர்களின் அனல் பறக்கும் விவாதம்

கடந்த 8 ஆண்டுகளில் 507 துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக மின்துறை அமைச்சர் தங்கமணி விளக்கம் அளித்துள்ளார். சட்டப்பேரவையில் திமுக உறுப்பினர் தங்கம் தென்னரசு எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், இடம் பிரச்னையால் துணை மின் நிலையம் அமைக்க முடியாத நிலை உள்ளதாக தெரிவித்தார்.

நத்தம் தொகுதிக்கு உட்பட்ட சந்தானவர்த்தி ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்ட அரசு நடவடிக்கை எடுக்கும் என்று உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். பேரவையில் நத்தம் தொகுதி உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் இதனை கூறினார்.

நுகர்பொருள் வாணிபக் கழகம் மற்றும் நேரடி கொள்முதல் நிலையங்களில் பணியாற்றும் சுமை தூக்கும் தொழிலாளர்களின் சம்பளம் 29 சதவீதம் உயர்த்தப்பட உள்ளதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் அறிவித்துள்ளார். பேரவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அவர், சம்பள உயர்வு நாளை முதல் அமலுக்கு வரும் என்றும் கூறினார்.

கொப்பரை தேங்காய்க்கான குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், நாளை முதல் அடுத்த 6 மாதங்களுக்கு கொப்பரை கொள்முதல் செய்யப்படும் என்று வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு அறிவித்துள்ளார். பேரவையில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு பதிலளித்த அமைச்சர் இதனை தெரிவித்தார்.

Exit mobile version