உள்ளாட்சித் தேர்தல்: அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர்கள் தீவிர பிரசாரம்

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

கடலூர் மாவட்டம் கீரப்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட சாக்காங்குடி கிராமத்தில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பிரசாரத்தின் போது பேசிய அமைச்சர் சி.வி.சண்முகம், மக்களுக்கான நலத் திட்டங்களை செயல்படுத்த விடாமல் திமுக தடுத்து வருவதாக குற்றம்சாட்டினார். மக்களுக்கு விரோதமான கட்சி திமுக என்று அமைச்சர் சி.வி.சண்முகம் சாடினார்.பிரசாரத்திற்கு செல்லும் இடமெல்லாம் அமைச்சர் மற்றும் அதிமுக வேட்பாளர்களுக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

ஈரோடு மாவட்டம் நம்பியூர் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். கரட்டுப்பாளையம், கோசனம், தாழ்குனி, கெட்டிசெவியூர் உள்ளிட்ட பகுதிகளில் அமைச்சர் பிரசாரம் செய்தார். பிரசாரத்தின் போது பேசிய அமைச்சர் செங்கோட்டையன், வறட்சியான பகுதிகளை பசுமையாக மாற்ற அத்திக்கடவு – அவிநாசி திட்டத்திற்கு ஆயிரத்து 642 கோடி ரூபாய் ஒதுக்கி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரலாற்று சாதனை படைத்துள்ளதாக கூறினார்.

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பிரசாரத்தின் போது பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, பட்டாசு தொழிலை அதிமுக அரசு பாதுகாத்ததாக கூறினார். நல்லாட்சி தொடர அதிமுக கூட்டணிக்கு வாக்களிக்குமாறும் அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பிரசாரம் செய்தார். பொம்மிநாயக்கன்பட்டி, நாரணாபுரம், பொன்னாரம் உள்ளிட்ட இடங்களில் அதிமுக அரசின் நலத்திட்டங்களை விளக்கி அமைச்சர் வாக்கு சேகரித்தார். பிரசாரத்தின் போது பேசிய அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், 2023ஆம் ஆண்டிற்குள் ஏழைகள் இல்லாத மாநிலமாக, தமிழகத்தை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறினார்.

ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் அதிமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். சிங்கம்பேட்டையில் உள்ள டீ கடை ஒன்றில் தேனீர் அருந்திய அமைச்சர், அங்கு வந்தவர்களிடம் அதிமுக கூட்டணி கட்சிகளுக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார். பிரசாரத்தின் போது பேசிய அமைச்சர், விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதைப் போல், உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றி பெறும் என்றார்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கதர் மற்றும் கிராம தொழில் வாரியத்துறை அமைச்சர் பாஸ்கரன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அதிமுக அரசின் வளர்ச்சித் திட்டங்களை எடுத்துக் கூறி, வாக்கு சேகரித்த அமைச்சர் மற்றும் வேட்பாளர்களுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Exit mobile version