குடியுரிமை சட்டத்தில் கற்பனை காரணங்களை உருவாக்கி, கட்டுக் கதைகளை அவிழ்த்து விட்டு எதிர்க்கட்சிகள் போராட்டத்தை தூண்டி விடுவதாக, வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழகமெங்கும் ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டமாக நடைபெறுகிறது. இதையொட்டி அதிமுக கூட்டணி கட்சிகள் தங்களது பிரசாரத்தை தொடங்கியுள்ளன.
இதன் ஒரு பகுதியாக, மதுரை மாவட்டம் உச்சப்பட்டியில் உள்ள கருப்பசாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்த வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், அதிமுக வேட்பாளர் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, தனது தேர்தல் பிரசாரத்தை துவக்கினார்.
கப்பலூர் பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்ட அவருக்கு, பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், தமிழக அரசின் வளர்ச்சித் திட்டங்களை எடுத்துக் கூறி, 100 சதவீதம் வெற்றியைப் பெறுவோம் என்று கூறினார்.
மேலும் , திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட அந்தநல்லூர் ஒன்றியத்தில், அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் தேர்தல் பிரசாரத்தை துவக்கினர். அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, தேவஸ்தானம், காமநாயக்கன் பாளையம், பெருகமணி, அந்தநல்லூர், திருச்செந்துறை உள்ளிட்ட வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தனர். அதிமுக அரசின் சாதனைகளை விளக்கி பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் வேட்பாளர்களுக்கும், அமைச்சர்களுக்கும், பொதுமக்கள் உற்சாகமான வரவேற்பு அளித்தனர்.