தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் கட்டுக்குள் இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்து உள்ளார்.
சென்னை ராயப்பேட்டை பார்டர் தோட்டம் பகுதியில் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, டெங்கு மற்றும் பன்றி காய்ச்சல் குறித்து பொதுமக்கள் விழிப்புணர்வுடன் உள்ளார்களா? என்று அவர் கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் விஜயபாஸ்கர், ராயப்பேட்டை பகுதியில் மருத்துவக் குழு அமைக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
காய்ச்சல் வந்தால் அலட்சியம் காட்டாமல் உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என அறிவுறுத்திய அவர், சீதோஷ்ண நிலை மாறுவதால் காய்ச்சல் வருவது சகஜம் என்றும், வெளியில் சென்று வந்தால், எல்லோரும் கைக்கழுவும் பழக்கத்தை பின்பற்ற வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
இந்த ஆய்வின் போது சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி அதிகாரிகள் உடனிருந்தனர்.