16 வேகன்கள் மூலம் மத்திய அரசிடமிருந்து நிலக்கரி பெறப்பட்டு வருவதால், தமிழகத்தில் அனல் மின் உற்பத்தி தடையின்றி நடைபெற்று வருவதாக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
நாமக்கல்லில் 2 லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய சாலை அமைக்கும் பணிகளை மின்துறை அமைச்சர் பி.தங்கமணி துவக்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் மழைக் காலத்தில் பாதுகாப்பான மின்சாரம் வழங்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.
தேவையான இடங்களில் அதிக மின் பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளதாகவும் அவர் கூறினார்.
தமிழகத்தில் தடையில்லா மின்சாரம் கிடைப்பதற்காக 16 வேகன்கள் மூலம் நிலக்கரி பெறப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.
இதனால் அனல்மின் உற்பத்தியில் தடை ஏற்படாது எனவும் அவர் தெரிவித்தார்.
நீலகிரியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பாதுகாப்பு காரணங்களுக்காக அதிக பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தங்கமணி கூறினார்.