அனல் மின் நிலையங்களுக்கு வழங்கப்படும் நிலக்கரி அளவை உயர்த்தி வழங்க வேண்டும் என மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பிரகலாட் ஜோஷி, பிரகாஷ் ஜவ்டேகர் ஆகியோரை டெல்லியில் சந்தித்து, தமிழகத்திற்கு 24 மணிநேரமும் மின்சாரம் தொய்வின்றி வழங்க தேவையான நிலக்கரி வழங்கவும், சிறப்பு நிதி ஒதுக்கவும் கோரிக்கை விடுத்தார்.
மேலும், திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் எண்ணூர் அனல் மின் நிலைய விரிவாக்கத் திட்டம் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் நடைபெற்று வரும், குந்தா நீரேற்று புனல் மின் திட்டம் ஆகியவற்றிற்கான பணிகள் தாமதமின்றி தொடரவும், இத்திட்டங்களுக்கான சுற்றுச்சூழல் அனுமதியை விரைவில் புதுப்பித்து வழங்குமாறு மத்திய சுற்றுச் சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரை, அமைச்சர் தங்கமணி சந்தித்து கோரிக்கை வைத்தார்.தொடர்ந்து, மத்திய நிலக்கரித்துறை அமைச்சர் பிரகலாட் ஜோஷியை சந்தித்த அமைச்சர் தங்கமணி, தமிழக மின்நிலையங்களுக்கு இந்திய நிலக்கரி நிறுவனங்களிடமிருந்து நாளொன்றுக்கு 60 ஆயிரம் மெட்ரிக் டன்கள் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
மேலும், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்த அமைச்சர் தங்கமணி, வடசென்னை அனல்மின் திட்டம்,உட்பட அனல்மின் திட்டங்களின் முன்னேற்றங்களை துரிதப்படுத்தவதற்கு நிதி ஒதுக்க கோரிக்கை விடுத்தார்.மத்தியமைச்சர்களுடனான சந்திப்பின் போது மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரும் உடனிருந்தார்.