நாமக்கல்லில் முதலமைச்சர் அடிக்கல் நாட்டவுள்ள புதிய மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை அமைப்பதற்கான இடத்தை அமைச்சர் தங்கமணி நேரில் ஆய்வு செய்தார்.
தமிழக அரசின் தொடர் முயற்சியால் கடந்த நவம்பர் மாதம், மத்திய அரசு நாமக்கல்லில் புதிய மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை அமைக்க அனுமதி வழங்கியது.
இதனைத் தொடர்ந்து நாமக்கல்லில் புதிய மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை அமைப்பதற்கான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்ததுடன், முதற்கட்டமாக 100 கோடி நிதி ஒதுக்கியது. இதையடுத்து, நாமக்கல் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது. இதேபோல் 38 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு, மருத்துவக் கல்லூரி அமைப்பதற்காக அளவீடுகள் முடிவடைந்துள்ளன.
இந்த நிலையில் வரும் மார்ச் 5ம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மருத்துவக் கல்லூரி கட்டுமான பணிகளை அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்க உள்ளார். விழாவிற்கான பணிகளை மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.