நாமக்கல் மாவட்டத்தில் தமிழக அரசு சார்பில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் ஆயிரம் ரூபாயுடன் கூடிய பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் விலையில்லா வேட்டி, சேலைகள் வழங்கும் பணிகளை மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தொடங்கி வைத்தார்.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில், பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் விலையில்லா வேட்டி சேலைகள் வழங்கும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா ஆகியோர் கலந்து கொண்டு நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு, குமாரபாளையம், பரமத்தி, சேந்தமங்கலம் ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகளுக்கு பொங்கல் பரிசு வழங்கி தொடங்கி வைத்தனர். 5, 7,415 குடும்ப அட்டைதாரர்களுக்கு 58கோடியே 35 லட்சம் மதிப்பீட்டில் பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கப்படுகின்றன. நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மெகராஜ், சட்டமன்ற உறுப்பினர் சந்திரசேகரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் தங்கமணி, ஊரக உள்ளாட்சித் தேர்தல் அமைதியாகவும் நேர்மையாகவும் நடைபெற்று முடிந்துள்ளதாக கூறினார்.