நாமக்கல்லில் புதிய சட்ட கல்லூரியை அமைச்சர் தங்கமணி ,சி.வி.சண்முகம் திறந்து வைத்தனர்

நாமக்கல்லில் புதிய அரசு சட்டக்கல்லூரியை அமைச்சர்கள் சி.வி.சண்முகம், தங்கமணி, சரோஜா ஆகியோர் துவக்கி வைத்தனர்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாமக்கல்லில் சட்ட கல்லூரி அமைக்கப்படும் என கடந்த மாதம் சட்டபேரவையில் அறிவித்திருந்தார். இதனையடுத்து, நாமக்கல் திருச்சி சாலை, டான்சி வளாகத்தில் தற்காலிகமாக சட்ட கல்லூரி அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கல்லூரியில் சேர்வதற்கான கலந்தாய்வு கடந்த 21 ஆம் தேதியன்று தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நாமக்கல் அரசு சட்டக் கல்லூரியினை சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, சத்துணவு திட்டத்துறை அமைச்சர் சரோஜா ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இந்த விழாவில் சட்டக் கல்வி இயக்குனர் சந்தோஷ் குமார், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஆசியா மரியம், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள் என பலர் பங்கேற்றனர். சட்டப் படிப்பிற்கான சேர்க்கைகள் முடிந்த பிறகு வகுப்புகள் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் 12 மாணவர்களுக்கு கல்லூரியில் சேருவதற்கான ஆணைகளை வழங்கினார்.

Exit mobile version