குடிநீர் பிரச்சினைகளை உடனுக்குடன் தீர்க்க தமிழக அரசு தயாராக உள்ளது: எஸ்.பி.வேலுமணி

தமிழகத்தில் குடிநீர் தொடர்பான பிரச்சினைகளை உடனுக்குடன் தீர்க்க தமிழக அரசு தயாராக உள்ளதாக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பருவமழை பொய்த்ததை அடுத்து வறட்சி நிலவுகிறது. இதனால் கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இதற்கென தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமையில் சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் குடிநீர் தொடர்பான பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு வருவதாகவும் மேலும் பிரச்சினைகள் தெரிவிக்கப்பட்டால் உடனுக்குடன் தீர்க்க தமிழக அரசு தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் அதிகமாக தண்ணீர் தட்டுப்பாடு என்று பொய்யான தோற்றம் உருவாக்கப்படுவதாக குற்றம் சாட்டினார்.

மேலும் கைசல் ஆப் என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டு சென்னையில் 200 வார்டுகளிலும் பணியில் உள்ள அதிகாரிகள் மூலம் குடிநீர் தொடர்பான புகார்கள் நிவர்த்தி செய்யப்படும் என்றும் வாரத்தில் ஏழு நாட்களும் இயங்கக்கூடிய வகையில் புகார் எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Exit mobile version