கோவை மாவட்டத்தில் நடைபெற்ற கூட்டுறவு வார விழாவில் பங்கேற்ற உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி 377 பயனாளிகளுக்கு 8 கோடி ரூபாய் மதிப்பிலான கடன் உதவிகளை வழங்கினார்.
ஆர் எஸ் புரம் பகுதியில் உள்ள மாநகராட்சி கலையரங்க கூடத்தில் மாவட்ட அளவிலான 66-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி, மாவட்ட ஆட்சியர் ராசமணி, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கூட்டுறவு பணியாளர்கள் பங்கேற்றனர்.
தொடந்து 377 பயனாளிகளுக்கு 8 கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான கடன் உதவிகளை அமைச்சர் வழங்கினார். மேலும் மாவட்ட அளவில் சிறப்பாக செயல்பட்ட கூட்டுறவு சங்கங்களுக்கு கேடயங்களும்,பணியாளர்களிடையே நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற 71 பணியாளர்களுக்கு பரிசுகளும் மற்றும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டது.
இதேபோல், தெலுங்குபாளையம் டெக்ஸ்டூல் காலனியில் 53 லட்சம் ரூபாய் மதிப்பில் புதியதாக அமைக்கப்பட்ட பூங்காவை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அவர்கள் திறந்து வைத்தார். மேலும் அந்தப் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள விளையாட்டு சாதனங்களையும் ஆய்வு செய்து பின்னர் 18 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் வடிகால் கட்டுதல் பணிக்கான பூமி பூஜையை அவர் துவக்கி வைத்தார்.