தமிழக அரசால் மதுரை மாவட்டத்திற்கு வழங்கப்பட்ட 63 புதிய பேருந்துகளின் சேவையை கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தொடங்கி வைத்தார்.
பொதுமக்கள் பயன்பாட்டிற்காக வாங்கப்பட்ட 555 புதிய பேருந்துகள் சேவையை சென்னையில் கடந்த 7-ம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். அதனடிப்படையில் பல்வேறு மாவட்டங்களுக்கு வழங்கப்பட்ட பேருந்து சேவைகளை அந்தந்த மாவட்ட அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், ஆட்சியர்கள் தொடங்கி வைத்தனர்.
அதன் ஒரு பகுதியாக மதுரை மண்டலத்திற்கு வழங்கப்பட்ட 63 புதிய பேருந்துகள் சேவையை பெரியார் பேருந்து நிலையத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தொடங்கி வைத்தார். இதில், மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதேபோல் சிவகங்கை மண்டலத்திற்கு வழங்கப்பட்ட 13 புதிய பேருந்துகள் சேவையை கதர் மற்றும் தொழில்துறை அமைச்சர் பாஸ்கரன் தொடங்கி வைத்தார். இந்த புதிய பேருந்துகள் சிவகங்கை – சேலம், மதுரை – தொண்டி, சிவகங்கை – திருப்பூர், காரைக்குடி – கோயம்புத்தூர் உள்ளிட்ட இடங்களுக்கு இயக்கப்படுகிறது.
இதேபோன்று, சேலம் மாவட்டத்திற்கு புதியதாக வழங்கப்பட்ட 112 அரசு பேருந்துகளின் சேவையை மாவட்ட ஆட்சியர் ரோகிணி கொடியசைத்து தொடங்கி வைத்தார். சேலத்தில் இருந்து கோவை, விழுப்புரம் வழியாக சென்னை, காஞ்சிபுரம், புதுச்சேரி, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு இந்த பேருந்துகள் இயக்கப்படுகின்றன.