மூன்று நாள் அரசு முறை பயணமாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பிரான்ஸ் சென்றுள்ளார்.
பிரான்ஸ் நாட்டின் டஸால்ட் ஏவியேசன் நிறுவனத்திடம் இருந்து 36 ரபேல் போர் விமானங்களை வாங்க கடந்த 2016ஆம் ஆண்டு இந்திய அரசு ஒப்பந்தம் மேற்கொண்டது. அதன் படி தயார் செய்யப்பட்டுள்ள ரபேல் போர் விமானங்களை இந்தியா சார்பில் பெற்றுக்கொள்வதற்காக பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் டெல்லியில் இருந்து விமானத்தில் புறப்பட்டு பிரான்ஸ் தலைநகரான பாரீஸை சென்றடைந்தார். இதைத்தொடர்ந்து பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சந்தித்து பேச உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சந்திப்பின் போது, இருநாட்டு பாதுகாப்பு, ராணுவ உறவுகள் குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.