கே-9 வஜ்ரா-டி ரக பீரங்கியின் செயல்பாட்டை துவங்கி வைத்தார் அமைச்சர் ராஜ்நாத் சிங்

இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட 51-ஆவது கே-9 வஜ்ரா-டி ரக பீரங்கியின் செயல்பாட்டை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் துவங்கி வைத்தார். கே-9 வஜ்ரா-டி பீரங்கியின் சிறப்பம்சங்கள் குறித்த தகவல்கள் 

கடந்த 2017ல் கே 9 வஜ்ரா பீரங்கிகளை தயாரித்து வழங்க மத்திய அரசு எல் அண்ட் டி நிறுவனத்துடன் சுமார் 4500 கோடி ரூபாய் மதிப்பில் ஒப்பந்தம் மேற்கொண்டது. அதன்படி 42 மாதங்களுக்குள் 100 கே 9 வஜ்ரா பீரங்கிகளைதயாரித்து வழங்க எல் அண்ட் டி ஒப்புக் கொண்டது. குஜராத் மாநிலத்திலுள்ள ஹாசிரா தொழிற்சாலையில் இந்த பீரங்கிகள் தயாரிக்கப்பட்டன.

இதுவரை 50 பீரங்கிகள் இந்திய ராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ள நிலையில் 51வது பீரங்கி முறைப்படி இந்திய ராணுவத்துடன் இணைக்கப்பட்டது. பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பீரங்கியின் பல்வேறு செயல்பாடுகளை பரிசோதித்தார். இதைத் தொடர்ந்து பாரம்பரிய பூஜைகளை மேற்கொண்ட அவர், பீரங்கியில் பயணம் செய்து ஆலையை சுற்றி வந்தார்.

இதைத் தொடர்ந்து பேசிய அவர், பாதுகாப்புத் துறை உள்பட பல்வேறு துறைகளில் தனியாா் நிறுவனங்களின் பங்களிப்பு மிக குறைவாக உள்ளது. இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தின் கீழ் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது எனக் குறிப்பிட்டார்.

50 டன் எடை, 47 கிலோ எடையுள்ள வெடிபொருள்களை வீசும் திறன், 43 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள இலக்குகளையும் குறிபார்த்து தாக்கும் வகையில் கே 9 வஜ்ரா பீரங்கிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. வஜ்ரா டி ரக பீரங்கிகளால் இந்திய ராணுவத்தின் தாக்கும் திறன் மேலும் அதிகரித்துள்ளது. இது குறித்து டுவிட்டரில் பதிவிட்ட ராஜ்நாத் சிங், 21ம் நூற்றாண்டில் போர்களங்களுக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

 

Exit mobile version