லடாக் எல்லை பிரச்னையில், மத்திய அரசின் செயல்பாட்டை வெளிப்படையாக சொல்ல முடியாது என, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
லடாக் எல்லையில் சீனாவின் அத்துமீறல் குறித்தும், எல்லை விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு குறித்தும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மாநிலங்களவையில் விளக்கம் அளித்தார். அப்போது பேசிய அவர், லடாக் எல்லைகளில் சீனா, 38 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவை ஆக்கிரமித்துள்ளதாக தெரிவித்தார்.
1963ஆம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தத்தை மீறி, பாகிஸ்தான் ஆக்கிரமித்த இந்திய பகுதிகளான 5,180 சதுர கிலோ மீட்டர் பரப்பளவையும் சீனா ஆக்கிரமித்துள்ளதாகவும் கூறினார். இதுபோன்று, அருணாச்சல பிரதேச எல்லைகளில் சுமார் 90,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவை சீனா ஆக்கிரமித்துள்ளதாக கூறிய ராஜ்நாத் சிங், 1993 மற்றும் 1996 ஆகிய ஆண்டுகளில் போடப்பட்ட எல்லை உடன்படிக்கைகளை சீனா மீறியுள்ளதாக குற்றம்சாட்டினார்.
சீனாவுடனான எல்லை பிரச்னையை இந்தியா பேச்சு வார்த்தை மூலம் தீர்க்க விரும்புவதாகவும், அதே சமயம் எத்தகைய சவால்களையும் எதிர்கொள்ள இந்தியா தயாராக உள்ளதாகவும் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். தற்போதைய சூழலில் எல்லை பிரச்னை தொடர்பாக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளை வெளிப்படையாக கூற இயலாது என்றும், நாட்டின் நலன் கருதி மத்திய அரசின் இந்த முடிவை அனைத்து உறுப்பினர்களும் புரிந்து கொள்வார்கள் என்று தான் நம்புவதாகவும் ராஜ்நாத் சிங் கூறினார்.