விழுப்புரம் அருகே பட்டா குறித்து மனு அளிக்க வந்த ஆதிதிராவிட மக்களிடம் மனுக்களை வாங்காமல் அமைச்சர் பொன்முடி உதாசீனப்படுத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் தாலுகாவில் பெண்ணை வலம் கிராமத்தில் ஆதிதிராவிடர் மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 2004 ஆம் ஆண்டு திமுக ஆட்சி காலத்தில் இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் நிலம் அளவீடு செய்யப்படாததால் பயனாளிகள் அதனை பெற முடியாமல் போனது. மேலும் மனைப்பட்டாவிற்கான ஆவணங்களை திமுக-வினர் கைப்பற்றிக் கொண்டதால், அதன் மீது அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மடப்பட்டு – திருக்கோவிலூர் சாலை வழியாக செல்லவுள்ளதை அறிந்து, பெண்ணை வலம் கிராமத்தை சேர்ந்த ஆதிதிராவிட மக்கள் சாலையோரம் மணிக் கணக்கில் காத்திருந்தனர்.
அப்போது அவ்வழியாக வந்த அமைச்சர் பொன்முடி, பொதுமக்கள் கூட்டமாக நிற்பதை கண்டும் வாகனத்தை நிறுத்தாமல் சென்றார். பின்னர் பொதுமக்கள் ஓடி வருதை கண்டு வாகனத்தை நிறுத்தி விசாரித்த அவர், கோரிக்கை மனுக்களை பெறாமல், மாவட்ட ஆட்சியரிடம் போய் சொல்லுங்கள் என அலட்சியமாக கூறிவிட்டு சென்றதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
பொதுமக்கள் கூட்டமாக காத்திருந்தும் அவர்களுக்கு உரிய மரியாதை கொடுக்காமலும், கோரிக்கைகளை கேட்க மனமில்லாமலும் அமைச்சர் பொன்முடி நடந்துகொண்ட விதம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.