சென்னை சேப்பாக்கத்தில் சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் துவக்கி வைத்தார்.
31-வது சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு, இன்று சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி, சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகையில் இருந்து தீவுத்திடல் வரை நடைபெற்றது.
இதில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பங்கேற்று பேரணியை துவக்கி வைத்தார். பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் இடையே சாலை போக்குவரத்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற இந்த பேரணியில், போக்குவரத்து பணியாளர்கள், மாணவர்கள், தன்னார்வலர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
பேரணியில், ஹெல்மெட் அணியவதன் அவசியம், மது அருந்துவிட்டு வாகனங்களை இயக்கக் கூடாது, அதிக வேகமாக வாகனங்களை இயக்கக் கூடாது உட்பட பல்வேறு சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்தியாவிலேயே விபத்து குறைந்த மாநிலமாக தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்கிறது. வரும் 27ம் தேதி வரை, தமிழகம் முழுவதும் மக்கள் அதிக கூடும் இடங்களில் 31வது சாலை பாதுகாப்பு வார விழா நடத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.