முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்து அவதூறு குற்றச்சாட்டுகளை கூறிவரும் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு அமைச்சர் ஜெயக்குமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்
நிதி ஆயோக் கூட்டத்திற்கு முன்பாக தமிழகத்தின் தேவைகளை 29 தலைப்புகளில் தொகுத்து பிரதமரிடம் முதலமைச்சர் அளித்ததை அறிக்கையொன்றில் அமைச்சர் ஜெயக்குமார் சுட்டிக்காட்டியுள்ளார். இதைப் படித்து பார்க்காமல் வீண் அவதூறு பரப்பும் அறிக்கையை வெளியிட்டிருப்பது காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடு என்று விமர்சித்துள்ளார். தமிழ்நாட்டிற்கு என்ன தேவை என்பதை கூறவே பிரதமரை முதலமைச்சர் தனியாக சந்தித்து பேசியதாக விளக்கமளித்துள்ள அமைச்சர் ஜெயக்குமார், பிரதமரிடம் முதலமைச்சர் விளக்கி கூறிய விவரங்கள் ஊடகங்களுக்கும் செய்தித்தாள்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மேகதாது குறுக்கே அணை கட்டப்படும் என்ற ராகுல்காந்திக்கு கண்டனம் தெரிவிக்காத ஸ்டாலினுக்கு முதல்வரை பற்றி பேச அறுகதையில்லை என்று ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். மேயராகவும் உள்ளாட்சித் துறை அமைச்சராகவும் இருந்தபோது ஸ்டாலின் நிறைவேற்றாத திட்டங்களை அதிமுக அரசு நிறைவேற்றி வருகிறது. இதனை பொறுக்க முடியாமல் தமிழக அரசு மீது ஸ்டாலின் குற்றச்சாட்டை சுமத்தி வருவதாக அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.