‘கஜா’ புயல் எச்சரிக்கை காரணமாக அனைத்து கடலோர மாவட்டங்களிலும் மறு உத்தரவு வரும் வரை மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்து மீன்பிடி படகுகளையும் பத்திரமாக மீன்பிடி துறைமுகம் மற்றும் மீன் இறங்கு தளங்களில் நிறுத்தி வைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
ஆழ்கடல் மீன்பிடிப்பிற்கு சென்ற சென்னை மீன்பிடி துறைமுகத்தை சேர்ந்த 160 மீன்பிடி விசைப்படகுகள் பத்திரமாக கரைதிரும்ப அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், ஆந்திர மீன்பிடி துறைமுகம் மற்றும் மீன் இறங்கு தளங்களுக்கு திரும்பும் விசைப்படகுகளை பத்திரமாக மீட்க அம்மாநில மீன்வளத்துறை இயக்குநரிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவித்துள்ளார்.
மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள ஏதுவாக நீச்சல் வீரர்கள், படகு உரிமையாளர்கள் தயார் நிலையில் உள்ளதாகவும் தனது அறிக்கையில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் குறிப்பிட்டுள்ளார்.