கோவை மாவட்டம் மத்வராயபுரத்தில் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி விவசாய மக்களை சந்தித்து குறைகளைக் கேட்டதுடன், வயல் வெளிகளில் இறங்கி நெற்பயிர்களை பார்வையிட்டார்.
கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சாடிவயல் பகுதியில் பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் 96 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பழங்குடியின மக்கள் 32 பேருக்கு பசுமை வீடுகள் கட்டுவதற்கான ஆணைகளை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வழங்கினார். கடந்த முறை அப்பகுதிக்கு வந்தபோது, விவசாய மக்களின் வேண்டுகோளை ஏற்று, வயல்களில் இறங்கி நாற்று நடும் பணிகளை தொடங்கிவைத்தார்.
இந்தநிலையில், பசுமை வீடுகளுக்கான ஆணைகளை வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர், விவசாய விளை நிலங்களில் இறங்கி நெற்பயிர்களை பார்வையிட்டார். நெற்பயிர்கள் அமோகமாக விளைந்திருந்ததைக் கண்டு மகிழ்ச்சியடைந்தார். மேலும், சாகுபடி முறைகள் குறித்தும், விவசாயிகளிடம் அமைச்சர் கேட்டறிந்தார்.