பருவமழை சவால்களை எதிர்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாகவும், கடலோர மாவட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
சென்னை எழிலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மழைநீர் தேங்கும் இடங்களை கண்டறிந்து பணிகளை மேற்கொள்ள பல்துறை மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறினார். குடிமராமத்து பணிகள் மூலம் நீர் மேலாண்மையில் தமிழக அரசு சரித்திர சாதனை படைத்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
நடமாடும் முதலுதவி குழுக்கள் தயார் நிலை உள்ளதாகவும், பாதுகாப்பு முகாம்களாக பள்ளி, கல்லூரிகள், சமுதாயக் கூடங்கள் தயார் நிலையில் இருப்பதாகவும் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.