உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்.
வாஜ்பாய், நரேந்திர மோடி ஆகியோர் தலைமையிலான மத்திய அமைச்சரவைகளில் இடம் பெற்றுத் தகவல் ஒலிபரப்பு, சட்டம் நீதி, பாதுகாப்பு, நிதி, நிறுவனங்கள் விவகாரம் ஆகிய துறைகளின் அமைச்சராகப் பொறுப்பேற்றுத் திறம்படச் செயலாற்றியவர் அருண் ஜெட்லி. 1952ஆம் ஆண்டு டிசம்பர் 28ஆம் நாள் டெல்லியில் பிறந்த அருண் ஜெட்லி மாணவப் பருவத்தில் அகில பாரத வித்யார்த்தி பரிசத்தில் இணைந்து செயல்பட்டவர். அதன்பின் வழக்கறிஞராகவும் தொழில் செய்து வந்தார். 1991ஆம் ஆண்டு பாஜக தேசியச் செயலாளராகவும், 1999ஆம் ஆண்டு அக்கட்சியின் செய்தித் தொடர்பாளராகவும் பணியாற்றினார். 1999ஆம் ஆண்டு வாஜ்பாய் அமைச்சரவையில் தகவல் ஒலிபரப்புத் துறை இணையமைச்சராகப் பொறுப்பேற்றார்.
அதன்பின் சட்டம் நீதித்துறை, நிறுவன விவகாரங்கள் துறை அமைச்சராகக் கேபினட்டில் இடம்பெற்றார். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் இருந்தபோது மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவராகவும் செயல்பட்டார். 2014ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றிபெற்று நரேந்திர மோடி தலைமையில் ஆட்சியமைத்தபோது அருண் ஜெட்லி நிதியமைச்சராகப் பொறுப்பேற்றார். அதன்பின் நிறுவன விவகாரங்கள் துறை, பாதுகாப்புத் துறை அமைச்சராகவும் செயல்பட்டார். அருண் ஜெட்லி நிதியமைச்சராக இருந்தபோது தான் ஐந்நூறு ரூபாய், ஆயிரம் ரூபாய் பணத்தாள்கள் செல்லாது என அறிவிக்கப்பட்டது. நாடு முழுவதற்குமான ஒரே வரி முறையாகச் சரக்கு சேவை வரி முறையும் அறிமுகப்படுத்தப்பட்டது.
கடந்த ஆண்டு மே மாதம் சிறுநீரகக் கோளாறு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்றுத் திரும்பினார். இந்த ஆண்டு தொடக்கத்தில் அமெரிக்காவுக்குச் சென்று சிகிச்சை பெற்றுத் திரும்பினார். 2019ஆம் ஆண்டில் மோடி இரண்டாம் முறை பிரதமராகப் பொறுப்பேற்றபோது அருண் ஜெட்லி அமைச்சராகப் பொறுப்பேற்கவில்லை. உடல்நலக்குறைவால் மீண்டும் கடந்த ஒன்பதாம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பயனின்றி இன்று நண்பகலில் காலமானார். அவருக்கு வயது 67.