இயல்புநிலை என்பதற்கு எடுத்துக் காட்டாகக் காஷ்மீர் திகழ்ந்து வருவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
மக்களவையில் காஷ்மீர் குறித்துக் காங்கிரஸ் உறுப்பினர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பேசியதற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதிலளித்தார். அப்போது, அரசமைப்புச் சட்டத்தின் 370ஆவது சட்டப் பிரிவை நீக்கினால் ரத்த ஆறு ஓடும் எனக் காங்கிரஸ் தெரிவித்ததாகவும், அதற்கு மாறாகக் காஷ்மீரில் முற்றிலும் இயல்பு நிலை நிலவுவதாகவும் குறிப்பிட்டார். 370ஆவது சட்டப்பிரிவு நீக்கப்பட்டபின் ஒரு தோட்டா கூட வெடிக்கவில்லை எனவும் அமித் ஷா தெரிவித்தார். 99 விழுக்காடு மாணவர்கள் தேர்வு எழுதியுள்ளதாகவும், மருத்துவமனைகளுக்கு 7 லட்சம் பேர் வெளிநோயாளிகளாக வந்து சிகிச்சை பெற்றுச் சென்றுள்ளதாகவும் அமித் ஷா தெரிவித்தார். முன்னாள் முதலமைச்சர்கள் 3 பேர் மட்டும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களை எப்போது விடுவிக்கலாம் என்பதை யூனியன் பிரதேச அரசே முடிவு செய்யும் எனவும், மத்திய அரசு அதில் தலையிடாது என்றும் அமித் ஷா தெரிவித்தார்.