விதிமுறைகளுக்கு புறம்பாக சுரங்கங்கள் மற்றும் குவாரிகளில் எடுக்கப்படும் கனிமங்களை கண்காணிக்க ஆளில்லா சிறிய ரக விமானம் பயன்படுத்தப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு, வெளியிட்டுள்ள அரசாணையில், விதிமுறைகளுக்கு புறம்பாக எடுக்கப்படும் கனிமங்களின் கனபரிமாணத்தை துல்லியமான முறையில் அளவீடு செய்ய, ஆளில்லா சிறிய ரக விமானம் மூலம் சுரங்கங்கள் மற்றும் குவாரிகள் கண்காணிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், சட்டவிரோத குவாரிகள் கட்டுப்படுத்தப்பட்டு அரசிற்கு ஏற்படும் வருவாய் இழப்பு தடுக்கப்படும் எனவும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக அண்ணா பல்கலைக்கழக சென்னை தொழில்நுட்ப நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இந்த நிதியாண்டு முதல் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் தமிழக அரசு அறிவித்தப்படி, தற்போது இத்திட்டம் அமல்படுத்தப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.