ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் பிரபல வீரரான மிலோஸ் ரோவ்னிக், மற்றொரு முன்னணி வீரரான அலெக்ஸாண்டர் ஸூவ்ரேவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் ஒற்றையர் பிரிவில் முதல் 3 சுற்று போட்டிகள் முடிவடைந்த நிலையில், 4 ஆம் சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் தரவரிசையில் 4 ஆம் இடத்தில் இருப்பவரும், ஜெர்மனியை சேர்ந்தவருமான அலெக்ஸாண்டர் ஸூவ்ரேவும், தரவரிசையில் 17 வது இடத்தில் இருப்பவரும், கனடாவை சேர்ந்தவருமான மிலோஸ் ரோவ்னிக்கும் மோதினர். பிரபல வீரர்கள் மோதியதால், இப்போட்டி ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில், ரோவ்னிக் 6 க்கு 1, 6 க்கு 1, 7 க்கு 6 என்ற நேர் செட் கணக்கில் ஸூவ்ரேவை வீழ்த்தியதையடுத்து, ஸூவ்ரேவ் தொடரிலிருந்து வெளியேறினார். இதனையடுத்து ரோவ்னிக் காலிறுதிக்கு தகுதி பெற்றார்.
ஆண்கள் இரட்டையர் பிரிவின் முதல் சுற்றில் நடந்த முன்னாள் வீரர்களுக்கான போட்டி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. அமெரிக்காவை சேர்ந்த வீரர்களான ஜான் மெக்னோர், பேட்ரிக் மெக்னோர் இணை ஃப்ரான்ஸின் ஹென்றி லிகோண்டி, ஆஸ்திரேலியாவின் டுட் வுட்ப்ரிட்ஜ் இணையுடன் மோதியது. களத்தில் வேடிக்கையாக நடந்து கொண்ட முன்னாள் வீரர்களின் நடவடிக்கையால் பார்வையாளர்கள் பெரிதும் கவரப்பட்டனர். பெரிதும் ரசிக்கப்பட்ட இப்போட்டியில், ஜான் மெக்னோர், பேட்ரிக் மெக்னோர் இணை, ஹென்றி லிகோண்டி, டுட் வுட்ப்ரிட்ஜ் இணையை 4 க்கு 1, 4 க்கு 3 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தியது.