வேலூரில் திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகனுக்கு சொந்தமான கல்லூரி மற்றும் சிமெண்ட் தொழிற்சாலையில் தேர்தலில் பட்டுவாடா செய்வதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த பலகோடி ரூபாயை வருமான வரித்துறையினர் கைப்பற்றியுள்ளனர். மக்களவையையொட்டி வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் திமுக பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிடுகிறார். இதையொட்டி துரைமுருகன் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதாக கிடைத்த தகவலையடுத்து, அவருக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்களில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனையில் சில லட்சங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்நிலையில், வேலூரில் துரைமுருகனுக்கு சொந்தமான கிங்ஸ்டன் கல்லூரி மற்றும் சிமெண்ட் தொழிற்சாலையில் வருமான வரித்துறையினர் இன்று திடீர் சோதனை மேற்கொண்டனர். இதில் வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்வதற்காக கட்டு கட்டாக மூட்டைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கோடிக்கணக்கான ரூபாயை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்தனர்.
பெட்டிகள் மற்றும் கோணிப்பைகளில் இந்த பணம் மூட்டை மூட்டையாக வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து இந்த பணத்தை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்து, தொடர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே, வள்ளிமலை அருகே பள்ளிக்குப்பத்தில் திமுக பகுதி செயலாளரும் துரைமுருகனின் நெருங்கிய நண்பருமான சீனிவாசன் வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
வருமான வரித்துறை சோதனை மற்றும் பணம் பறிமுதலால் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் வேலூர் தொகுதியில் போட்டியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.