அரசின் ஆவின் நிறுவனத்தின் பால் தமிழகம் முழுவதும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல ஹெரிடேஜ், திருமலா, ஜெர்சி, வல்லபா மற்றும் சீனிவாசா உள்ளிட்ட தனியார் நிறுவனங்களும் பால் விற்பனையில் ஈடுபட்டு உள்ளன. இந்த நிலையில் தனியார் பால் நிறுவனங்கள் பால் விலையை உயர்த்தி உள்ளன. பால், தயிர் ஆகியவற்றின் விலையை லிட்டருக்கு 2 ரூபாய் வரை உயர்த்தி உள்ளது.
இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. பால் கொள்முதல் விலை மற்றும் உற்பத்தி மூலப்பொருட்களின் விலை ஏற்றத்தால் பால் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி தனியார் பால் விலை 3 வகையாக பிரித்து உயர்த்தப்பட்டுள்ளது. தனியார் சமன்படுத்தப்பட்ட பால் லிட்டர் 50 லிருந்து 52 ரூபாயாக உயர்ந்துள்ளது. இருமுறை சமன்படுத்தப்பட்ட பால் 48-ல் இருந்து 50 ரூபாய் ஆகவும், நிலைப்படுத்தப்பட்ட பால் 62-ல் இருந்து 64 ரூபாய் ஆகவும் உயர்கிறது. இதேபோல தயிர் லிட்டருக்கு 2 ரூபாய் உயர்ந்து 74 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலையேற்றம் இல்லத்தரசிகள் மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களையும் வெகுவாக பாதிப்பதாக கூறியுள்ள தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்கத்தினர், தனியார் பால் விலை உயர்வை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.