மும்பை தாக்குதலுக்கு பதில் தாக்குதல் நடத்த முந்தைய அரசு, ராணுவத்துக்கு அனுமதி வழங்கவில்லை என்று பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.
உத்தரபிரதேசத்தில் பல்வேறு நலத்திட்ட பணிகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். பின்னர், நொய்டாவில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், பாகிஸ்தான் தொடர்புடைய தாக்குதல்கள் மற்றும் குண்டுவெடிப்பு சம்பவங்கள் முந்தைய ஆட்சிகளிலும் நடந்துள்ளதாக குறிப்பிட்டார். அப்போதெல்லாம் , பாதுகாப்புத் துறை அமைச்சர் மட்டுமே மாற்றப்பட்டார் என்று கூறிய அவர், மாற்றப்பட வேண்டியது பாதுகாப்பு அமைச்சரா அல்லது கொள்கைகளா என்று கேள்வி எழுப்பினார். மும்பையில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதில் தாக்குதல் நடத்த ராணுவத்துக்கு முந்தைய காங்கிரஸ் அரசு அனுமதி வழங்கவில்லை என்றும் மோடி குற்றம் சாட்டினார். 2014 மக்களவை தேர்தலுக்கு முன்பு இந்தியாவில் செல்போன் தயாரிப்பு ஆலைகள் 2 மட்டுமே செயல்பட்டு வந்ததாகவும், தற்போது 125 செல்போன் தயாரிப்பு ஆலைகள் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.