காஷ்மீரில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் சென்ற வாகனங்கள் மீது நடைபெற்ற தற்கொலைப்படை தாக்குதலில் 40 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டம் அவந்திபுராவில் 70 வாகனங்களில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்கள் 2 ஆயிரத்து 500 பேர் சென்று கொண்டு இருந்தனர். அப்போது பாதுகாப்பு படை வீரர்கள் சென்ற 2 பேருந்துகள் மீது பதுங்கி இருந்த தற்கொலை படை தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் பலியானார்கள்.
ஏராளமான வீரர்கள் படுகாயம் அடைந்து அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சக்திவாய்ந்த வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனிடையே தாக்குதல் நடத்திய தற்கொலைப்படை தீவிரவாதியின் புகைப்படம் வெளியாகியுள்ளது.
200 கிலோ வெடிமருந்து கொண்டு தாக்குதல் நடைபெற்றதாக கூறப்படுகிறது. ராஜஸ்தான் மாநிலம் உரியில் 17 பேர் இறந்த சம்பவத்திற்கு பிறகு இந்த தாக்குதலே பெரிய தாக்குதலாக கருதப்படுகிறது.