வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவகாற்றின் தீவிரத்தால், நாடு முழுவதும் பல்வேறு திசைகளிலும், பருவமழை கொட்டித் தீர்த்து வருகிறது. தற்போது வட மாநிலங்களிலும், கிழக்கு மாநிலங்களிலும், தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், வங்க கடலில் ஒடிசா அருகே, மேல் அடுக்கு சுழற்சி நிலவுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து, வரும், 28ம் தேதி, வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. தமிழகத்தை பொருத்தவரை, இன்று முதல் இரண்டு நாட்களுக்கு, பரவலாக லேசான மழை பெய்யும் என்றும், சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை முற்பகலில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், மாலை மற்றும் இரவு நேரங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.