இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், சொந்த ஊர்களுக்கு செல்வதற்கான ஏராளமான வடமாநிலத் தொழிலாளர்கள், சென்னை எம்ஜிஆர் மத்திய ரயில் நிலையத்தில் தொடர்ந்து குவிந்து வருகின்றனர்.
கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில், தமிழ்நாட்டில் இரவு நேரம் மற்றும் வார இறுதி நாளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பணியாற்றி வரும் வடமாநிலத் தொழிலாளர்கள், மூட்டை முடிச்சுகளுடன் சொந்த ஊருக்கு செல்கின்றனர். பீகார், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்ல முன்பதிவு செய்தும், தட்கல் மூலம் டிக்கெட் பதிவு செய்தும் சொந்த ஊர் செல்கின்றனர்.
இதற்காக வடமாநில தொழிலாளர்கள் சென்னை எம்ஜிஆர் மத்திய ரயில் நிலையத்தில் குவிந்து வருகின்றனர். ரயில்களில் இடம் கிடைக்காத பயணிகள், ரயில் நிலையங்களிலேயே காத்துகிடக்கும் நிலையில், ரயில்வே பாதுகாப்பு படையினர் அவர்களுக்கு தேவையான ஏற்பாடுகளை செய்துள்ளனர். அனைத்து தொழிலாளர்களும் முகக்கவசம் அணிய அறிவுறுத்தப்படுவதுடன் தனிமனித இடைவெளியை பின்பற்றுவதையும் ரயில்வே பாதுகாப்பு படையினர் உறுதி செய்து வருகின்றனர்.