இதயக்கனி எம்.ஜி.ஆரின் அரசியல் வாரிசு அம்மா

 

மைசூர் சமஸ்தானத்தில் மேல்கோட்டை ஊரில் வாழ்ந்த ஜெயராம் -வேதவல்லி என்ற தம்பதிக்கு மகளாக 24 பிப்ரவரி 1948ஆம் நாள் புரட்சி தலைவி அம்மா பிறந்தார். தன்னுடைய 2 வயதில் தந்தை இழந்த ஜெயலலிதா, சர்ச் பார்க் ப்ரேசெண்டேஷன் கான்வென்ட்டில் படித்து மெட்ரிக் தேறினார். ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் புகுமுக வகுப்பில் படிக்க அனுமதி கிடைத்த நேரத்தில் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. எனவே படிப்பைக் கைவிட்டு நடிகையானார். ஸ்ரீதர் இயக்கிய வெண்ணிற ஆடை என்கிற படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் நடிகையாக அறிமுகமானார்.

எம்.ஜி.ஆருடன் முதன் முதலாக இணைந்த ஜெ

1965ஆம் ஆண்டு திரையுலகில் அறிமுகமான ஜெயலலிதா, சுமார் 127 திரைப்படங்களில் நடித்திருக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னட என பல மொழிகளில் நடித்தார். 1965ஆம் ஆண்டு எம்.ஜி.ஆரின் “ஆயிரத்தில் ஒருவன்” படத்தில் கதாநாயகியாக நடித்தார். எம்.ஜி.ஆருடன் ஜெயலலிதா நடித்த அனைத்து திரைப்படங்களும் வெகுவாக பாராட்டப்பட்டது.

எம்.ஜி.ஆரை வெகுவாக கவர்ந்த ஜெயலலிதா

ஜெயலலிதாவின் நடிப்பு திறமையும், நடவடிக்கையும் எம்.ஜி.ஆரை வெகுவாக கவர்ந்தது. இதனையடுத்து, 1981ஆம் ஆண்டு ஜெயலலிதாவை அ.தி.மு.க-வின் அடிப்படை உறுப்பினராக எம்.ஜி.ஆர் சேர்த்து கொண்டார். எம்.ஜி.ஆர் தான் அறிமுகப்படுத்திய சத்துணவு திட்டத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க பிரபலமான முகத்தை தேடினார். மக்களிடம் செல்வாக்கை பெற்ற ஜெயலலிதாவிடம் சத்துணவு திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று எம்.ஜி.ஆர் கூறினார். எம்.ஜி.ஆரின் உத்தரவிற்கு இணங்க, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஜெயலலிதா, அத்திட்டத்திற்கு பெயர் சேர்த்ததோடு, ரூ.40 ஆயிரம் நன்கொடையும் வசூலித்து தந்தார்.

அ.தி.மு.க-வின் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர்

ஜெயலலிதாவின் இந்த அர்ப்பணிப்பை வெகுவாக பாராட்டிய எம்.ஜி.ஆர், சத்துணவு திட்ட உயர்மட்ட குழுவிலும் இடம் அளித்தார். தொடர்ந்து ஜெயலலிதாவை கவனித்து வந்த எம்.ஜி.,ஆர் 1983ஆம் ஆண்டு அ.தி.மு.க-வின் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளராக நியமித்தார். கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளராக ஜெயலலிதா தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். சென்ற இடமெல்லாம் ஜெயலலிதாவிற்கு வரவேற்பு கிடைத்தது. தொண்டர்களின் ஆதரவும் கிடைத்தது. தனது பேச்சாற்றலால் மக்களை வெகுவாக கவர்ந்த ஜெயலலிதா, எம்.ஜி.ஆருக்கு அடுத்தபடியான மரியாதையை தர ஆரம்பித்தனர்.

ஜெயலலிதா – ராஜசபை எம்.பி

ஜெயலலிதாவிடம் இருந்த பேச்சு திறமை, அபாரமான ஆங்கில, இந்தி மொழி புலமையை கவனித்த எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவை ராஜசபை எம்.பி ஆக்கினார். மேலும் கட்சியின் ராஜசபை துணைத்தலைவராகவும் ஜெயலலிதாவை எம்.ஜி.ஆர். நியமித்தார். நாடாளுமன்றத்தில் தன் ஆங்கில புலமையால் பல தலைவர்களை கவர்ந்தார். தன் பேச்சுகளால் அப்போது பிரதமராக இருந்த இந்திராகாந்தியே கவர்ந்தார். இவருக்கு நாடாளுமன்றத்தில் 185வது இருக்கை அளிக்கப்பட்டது. இது பல காலத்திற்கு முன்னர் அறிஞர் அண்ணா (முன்னாள் தமிழக முதல்வர் கா. ந. அண்ணாதுரை) அமர்ந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆறு அடி வெள்ளி செங்கோல் பரிசு

1986ஆம் ஆண்டு மதுரையில் ஒரு மாபெரும் ரசிகர் மன்ற மாநாடுக்கு ஏற்பாடு செய்தார் எம்.ஜி.ஆர். ஏற்பாடு செய்யும் பணிகளில் ஜெயலலிதாவிடம் பெருமளவில் எம்.ஜி.ஆர் கொடுத்தார். நிறைவு தினத்தன்று எம்.ஜி.ஆர் பேசுவதற்கு முன் மேடையில் பேசினார் ஜெயலலிதா. அப்போது தங்க முலாம் பூசப்பட்ட ஆறு அடி வெள்ளி செங்கோலை எம்.ஜி.ஆருக்குப் ஜெயலலிதா பரிசளித்தார்.

கட்சிக்குள் செல்வாக்கை பெற்று வந்த ஜெயலலிதாவிற்கு சவாலாக, கட்சிக்குள் பொறாமையும் ஏற்பட்டது. இந்நிலையில் எம்.ஜி.ஆருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டு, அமெரிக்காவில் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அப்போது தமிழகத்திற்கு சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டது. சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தில் ஜெயலலிதா சிறப்பாக பணியாற்றினார். இதனையடுத்து மீண்டும் தமிழக முதல்வராக எம்.ஜி,ஆர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

எம்.ஜி.ஆர் மறைவு

எம்.ஜி.ஆர் 1987ஆம் ஆண்டு டிசம்பர் 24ந் தேதி உடல்நல குறைவால் காலமானார். எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகு, பல்வேறு இன்னல்களை சந்தித்த ஜெயலலிதா, இரண்டு ஆண்டுகள் கழித்து 1989 ஆவது ஆண்டில் அ. தி. மு. கவின் தலைமைப் பொறுப்பேற்று அதன் பொதுச்செயலாளராகினார். தம் முயற்சியால் உடைந்து போன கட்சியை மீண்டும் இணைத்து முடக்கப்பட்ட கட்சி சின்னத்தை காப்பாற்றினார் ஜெயலலிதா.

முதல்வாராக பதவிவேற்ற ஜெ

எம்.ஜி.ஆரின் மறைவிற்கு பிறகு கட்சி என்ன ஆகுமோ என்று பலரும் புரளி பேசி வந்த நிலையில், கட்சியை தன் தோளில் தாங்கி, 1991ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று தமிழகத்தின் முதல்வராக முதன் முறையாக பொறுப்பேற்றார். இவர் முதல்வராக இருந்த 1991–96 பதவிக் காலத்தில் பல புரச்சிகரமான திட்டங்களை தமிழகத்தில் கொண்டு வந்தார். பெண்கள் முன்னேற்றத்தில் மிகுந்த அக்கறை கொண்டு பல நல்ல திட்டங்களை கொண்டு வந்தார்.

தமிழக அரசியலில் தவிர்க்கப்படாத சக்தி ஜெயலலிதா

எம்.ஜி.ஆருக்கு பிறகு தொடர்ச்சியாக 2 முறை முதல்வராக பொறுப்பேற்றவர் என்ற பெற்றார். தமிழகத்தின் இரும்பு பெண்மணி என்று மக்களால் அன்போடு அழைக்கப்பட்ட ஜெயலலிதா, மக்கள் விரும்பும் தலைவியாக போற்றப்பெற்றார். தன்னுடைய ஆட்சியில் மகத்தான அறிமுகப்படுத்திய ஜெயலலிதா மக்களிடம் நீங்கா அன்பை பெற்றார். அம்மா உணவகம், இலவச அரிசி, விலையில்லா மடிக்கணனி, விலையில்லா மிக்சி, கிரைண்டர், மருத்துவ காப்பீடு, தொட்டில் குழந்தை திட்டம் என பல்வேறு திட்டங்களை அறிவித்து மக்களின் துயரை துடைத்தார் ஜெயலலிதா. மக்களின் அன்பை பெற்ற ஜெயலலிதா தமிழக அரசியல் மட்டுமல்லாமல், இந்திய அரசியலிலும் தவிர்க்க முடியாத சக்தியாக மாறினார்.

தமிழகத்தை சோகத்தில் ஆழ்த்திய ஜெயலலிதா மறைவு

2016ஆம் ஆண்டின் செப்டம்பர் 22 அன்று உடல்நலக் குறைவின் காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். 75 நாட்கள் பிறகு ஜெயலலிதா, 5 டிசம்பர் 2016 அன்று இரவு 11.30 மணிக்கு சிகிச்சை பலனின்றி காலமானார். வரலாற்று சிறப்பு மிக்க இரும்பு பெண்மணி ஜெயலலிதாவின் மறைவு தமிழகத்தை சோகத்தில் ஆழ்த்தியது.

Exit mobile version