கருணாநிதிக்கு நினைவு வளைவு கட்டப்பட்டுள்ள நிலையில், எம்.ஜி.ஆருக்கு நினைவு வளைவு கட்டப்பட்டது மட்டும் எப்படி அரசியல் உள்நோக்கம் கொண்டதாக இருக்கும் என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மெரினா கடற்கரை சாலையில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நினைவு வளைவு கட்டப்பட்டு, கடந்த 17 ஆம் தேதி திறக்கப்பட்டது. முன்னதாக கட்டுமான பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நீதிபதிகள் மணிக்குமார், சுப்ரமணியம் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜெயபிரகாஷ் நாராயணன், எம்.ஜி.ஆர் நினைவு வளைவு கட்டப்பட்டுள்ள இடம் மாநில நெடுச்சாலை அல்ல என்றும், அது சென்னை மாநகராட்சி சாலை எனவும், மாநகராட்சியிடம் ஏற்கனவே உரிய அனுமதி பெற்று தான் வளைவு கட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
எம்ஜிஆர் நினைவு வளைவு அரசியல் உள்நோக்கத்தோடு கட்டப்பட்டது என்ற மனுதாரர் தரப்பு வழக்கறிஞரின் கூற்றுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த நீதிபதிகள், அண்ணா அவர்களுக்கும், கருணாநிதிக்கும் நினைவு வளைவு உள்ள போது, எம்ஜிஆர் நினைவு வளைவு கட்டப்பட்டது மட்டும் எப்படி அரசியல் உள்நோக்கம் கொண்டதாக இருக்கும் என கேள்வி எழுப்பினர். வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.