ஏழை, எளிய மக்களின் வாழ்வை வளமாக்கும் திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தி வருவதாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்து உள்ளார்.
சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடியில் நடைபெற்ற அரசு விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு, 138 கோடியில் 21 புதிய திட்டங்களை தொடங்கி வைத்தார். இரண்டு புதிய பாலங்கள் உள்பட 53 பணிகளுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார். 3 ஆயிரத்து 816 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் வழங்கினார்.
நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, கிராமப் புறங்களில் அதிமுக அரசால் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்கள் குறித்து பட்டியலிட்டார். எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் அறிவிப்பின் பேரில், அக்கட்சியினர் கிராமம் கிராமாக செல்வதாக கூறிய முதலமைச்சர், அதிமுக தொடங்கப்பட காலத்திலிருந்தே கிராமம் தோறும் மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை போக்கி வருவதாக கூறினார்.
இதனைதொடர்ந்து, சேலம் மாநகராட்சிக்கு சொந்தமான அண்ணா பூங்காவில் 2ஆயிரத்து 100 சதுர அடியில் 80 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் மணிமண்டபத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
மறைந்த முதலமைச்சர்களின் மணிமண்டபத்தை திறந்து வைத்து பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மக்களே தங்கள் குடும்பங்கள் என வாழ்ந்தவர்களின் மணிமண்டபத்தை திறந்து வைப்பது, தன் வாழ்நாளில் தனக்கு கிடத்த பாக்கியம் என்றும் தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ பாடுபட்டவர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா என்றும் புகழாரம் சூட்டினார்.
வியாழக் கிழமை நடைபெறும் எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழாவில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்ட முதலமைச்சர், ஓமலூர் பிரதான சாலைக்கு எம்.ஜி.ஆரின் பெயர் சூட்டப்படும் என அறிவித்தார்.
இதைத்தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வத்தின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து அமைக்கப்பட்ட மின் கோபுர செயல்பாட்டை தொடங்கி வைத்த முதலமைச்சர், புதிய பேருந்துகளையும் கொடியசைத்து அனுப்பி வைத்தார்.