மேட்டூர் அணையின் உபரிநீரை 100 ஏரிகளில் நிரப்பும், மேட்டூர் சரபங்கா நீரேற்றுத் திட்டத்தை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
மேட்டூர் அணையின் உபரி நீரை சேமிக்கும் வகையில், 565 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான மேட்டூர்-சரபங்கா நீரேற்றுத் திட்டத்திற்கு கடந்தாண்டு மார்ச் மாதம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.
இதன் மூலம் மேட்டூர் அணையின் உபரிநீர் திப்பம்பட்டி பகுதியில் இருந்து கால்வாய் மூலம் நீரேற்று நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, பிரதான நீரேற்று நிலையத்தில் இருந்து 12 கி.மீ. தொலைவில் உள்ள எம்.காளிப்பட்டி ஏரிக்கு அனுப்பப்படும்.
அங்கிருந்து 23 ஏரிகளுக்கும், வெள்ளாளபுரம் ஏரி, கன்னந்தேரி ஏரிகள் மூலம் 44 ஏரிகளுக்கு மேட்டூர் அணையின் உபரிநீர் கொண்டு செல்லப்படுகிறது. இந்த திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், 62 கோடியே 63 லட்ச ரூபாய் மதிப்பில் முடிவுற்ற 36 பணிகளை திறந்து வைத்தும், 5 கோடியே 36 லட்ச ரூபாய் மதிப்பில் 23 புதிய திட்டப் பணிகளுக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மேட்டூர் உபரி நீரை ஏரிகளில் நிரப்பும் திட்டம் அறிவிக்கப்பட்ட இரண்டே ஆண்டில், தமிழகத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டு உள்ளதாக பெருமிதத்துடன் குறிப்பிட்டார். விவசாயிகள் நலன் கருதி, விரைவாக இத்திட்டத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வந்த அரசு உயரதிகாரிகள், பொதுப்பணித்துறை பணியாளர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் முதலமைச்சர் அப்போது பேசினார்.
தொடர்ந்து பேசிய முதலமைச்சர், 5 ஆண்டு காலத்தில், 2 முறை விவசாய பயிர் கடனை ரத்து செய்த ஒரே அரசு, அதிமுக அரசு என்றும் தெரிவித்தார்.
மேலும், ஏப்ரல் 1ம் தேதி முதல் விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்தார்.
அதை தொடர்ந்து, மேட்டூர்-சரபங்கா நீரேற்றுத் திட்டம் மூலம் எம்.காளிப்பட்டி ஏரிக்கு வந்த நீரை முதலமைச்சர் பார்வையிட்டார். மேட்டூர் அணையின் உபரிநீர், பிரதான நீரேற்று நிலையத்தில் இருந்து 12 கி.மீ. தொலைவில் உள்ள எம்.காளிப்பட்டி ஏரிக்கு வந்து சேருகிறது. மேட்டூர் அணையில் இருந்து எம்.காளிப்பட்டி ஏரிக்கு கொண்டு வரப்பட்ட நீரை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மலர் தூவி வரவேற்றார்.