நடப்பாண்டில் இரண்டாவது முறையாக மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ளது.
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் அளவு குறைந்ததால் கர்நாடக அணைகளில் இருந்து தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து குறைந்தது. அதனை தொடர்ந்து மேட்டூர் அணைக்கும் நீர்வரத்து குறைந்த நிலையில் தற்போது மீண்டும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. அதன் படி மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடியிலிருந்து 20 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால் இந்த ஆண்டில் இரண்டாவது முறையாக மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை மீண்டும் எட்டியுள்ளது. தற்போது அணையின் நீர்இருப்பு 93 புள்ளி 470 டி.எம்.சியாக இருந்து வருகிறது. மேலும் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்காக 15 ஆயிரத்து 600 கனஅடி நீரும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 600 கனஅடி நீரும் வெளியேற்றப்படுகிறது.