3வது முறையாக நிரம்பியது மேட்டூர் அணை: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் மேட்டூர் அணை, நடப்பாண்டில் 3வது முறையாக முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதை அடுத்து, காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்படும் நீரின் அளவும் அதிகரிப்பதாலும் மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ளது. மேட்டூர் அணை வரலாற்றில், 86 ஆண்டுகளில் 44-வது முறையாகவும், நடப்பாண்டில் 3-வது முறையாகவும் 120 அடியை எட்டியது. தொடர் மழையால், மேட்டூர் அணைக்கு 16 ஆயிரத்து 239 கனஅடியாக இருந்த நீர்வரத்து 25 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர் இருப்பு 93 புள்ளி 47 டி.எம்.சியாக உள்ளது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக 22 ஆயிரத்து 500 கனஅடி நீரும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 350 கன அடி நீரும் திறந்துவிடப்படுகிறது.

இந்நிலையில் மேட்டூர் அணையின் முழு கொள்ளளவை எட்டியதை தொடர்ந்து, கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. வருவாய்துறை சார்பில் காவிரி கரையோர பகுதிகளான தங்காரி பட்டினம், அண்ணாநகர், பெரியார் நகர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மக்களுக்கு தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. மேட்டூர் அணையில் இருந்து 22 ஆயிரத்து 500 கனஅடி நீர் வெளியேற்றப்படுவதால், கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Exit mobile version