மேட்டூர் அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு ஆயிரத்து 607 கன அடியாக அதிகரித்துள்ளது.
கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்படும் நீரின் அளவு அதிகரித்ததன் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து உயர்ந்தது. நேற்று காலை மேட்டூர் அணைக்கான நீர் வரத்து வினாடிக்கு 183 கனஅடியாக இருந்த நிலையில், இன்று காலை நிலவரப்படி நீர் வரத்து ஆயிரத்து 607 கனஅடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 105 புள்ளி 17 அடியாகவும், நீர் இருப்பு 71 புள்ளி 704 டி.எம்.சியாகவும் உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 750 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையிலிருந்து திறக்கப்படும் நீரை காட்டிலும் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
கர்நாடக அணையில் திறக்கப்பட்ட உபரிநீரால் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 3 ஆயிரத்து 800 கனஅடியில் இருந்து வினாடிக்கு 4 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. வெள்ளப் பெருக்கால் ஏற்பட்ட சேதங்களை சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் அருவியில் குளிக்க விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து 207வது நாளாக நீட்டிக்கப்பட்டுள்ளது.