பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மெட்ரோ ரயில் ஊழியர்கள் இரண்டாவது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் சென்னையில் மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர்.
மெட்ரோ ரயில் நிறுவனத்தில் பணியாற்றி வரும் வரும் ரயில் ஓட்டுநர்கள் 8 பேர் இணைந்து இருதினங்களுக்கு முன்பு தொழிற்சங்கம் ஆரம்பித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர்களை மெட்ரோ நிர்வாகம் பணி நீக்கம் செய்துள்ளது.
இதை கண்டித்தும் இருமடங்கு ஊதியத்திற்கு புதிய ஒப்பந்த ஊழியர்களை பணியமர்த்தும் மெட்ரோ ரயில் நிர்வாகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஊழியர்கள் நேற்று மாலை முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து நேற்று மெட்ரோ ரயில் சேவை பாதிப்புக்குள்ளானது.
இந்நிலையில், மெட்ரோ ஊழியர்களின் வேலை நிறுத்தம் 2-வது நாளாக இன்றும் தொடர்கிறது. இதனால், வேலைக்கு செல்லும் ஊழியர்கள் மற்றும் பயணிகள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
இதனிடையே, தொழில்நுட்ப கோளாறு காரணமாக மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.