மெட்ரோ ரயில் பயணிகளுக்கு, கைபேசியில் கட்டணமில்லா பொழுதுபோக்கு அம்சங்கள் மற்றும் மின்சார ஸ்கூட்டர் வசதி சேவையை தொழில் துறை அமைச்சர் எம்.சி. சம்பத் தொடங்கி வைத்தார்.
மெட்ரோ ரயிலில் பயணிப்போரின் எண்ணிக்கையை அதிகரிக்க சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் கடந்த இரண்டு மாதத்திற்கு முன் சோதனை ஓட்டமாக தொடங்கப்பட்ட சுற்றுசூழலுக்கு மாசில்லா மின்சார ஸ்கூட்டர் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இதனையடுத்து நந்தனம், ஆலந்தூர், கிண்டி மற்றும் சின்னமலை ஆகிய மெட்ரோ ரயில் நிலையங்களில் நேற்று இந்த சேவை தொடங்கப்பட்டது. இதே போல், மெட்ரோ ரயில் நிர்வாகத்துடன் இணைந்து sugar box என்ற நிறுவனம் உருவாக்கியுள்ள, பயணிகள் தங்கள் கைபேசியில் கட்டணமில்லாமல் பொழுதுபோக்கு அம்சங்களை காண்பதற்கான செயலியை, அமைச்சர் எம்.சி. சம்பத் தொடங்கி வைத்தார். விரைவில் இந்த சேவைகள் அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலும் செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் மெட்ரோ நிர்வாக அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.