முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், சென்னையில் இன்று நடைபெறும் விழாவில், 67 ஆயிரத்து, 378 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அடிக்கல் நாட்டுகிறார். இதில், இரண்டாம் கட்டமாக தொடங்கப்படும் சென்னை மெட்ரோ ரயில் திட்டப்பணிகள், வழித்தடங்கள் குறித்து பார்ப்போம்.
சென்னையில், முதல் கட்ட மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் வண்ணாரப்பேட்டை முதல் விமானநிலையம் முதல் வழித்தடத்திலும், சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரை இரண்டாவது வழித்தடத்திலும் மொத்தம் 45 கி.மீ தூரத்திற்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.
அடுத்தக்கட்டமாக, 61 ஆயிரத்து 843 கோடி ரூபாயில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் தொடங்கப்பட இருக்கிறது. மொத்தம், 117 புள்ளி 12 கி.மீ தூரத்திற்கு பணிகள் நடக்க இருக்கிறது. இந்த திட்டம் 3 வழித்தடங்களாக பிரிக்கப்பட்டு உள்ளது.
அந்த வகையில, 3வது வழித்தடம் மாதவரம்-சிப்காட் இடையில் 45 புள்ளி 8 கி.மீ தூரத்துக்கும், 4வது வழித்தடம் கலங்கரை விளக்கம்-பூந்தமல்லி பைபாஸ் வரைக்கும் 26.1 கி.மீ தூரத்திற்கும், 5வது வழித்தடம் மாதவரம்-சோழிங்கநல்லூர் இடையில் 47 கி.மீ தூரத்திற்கும் மெட்ரோ ரயில் பணிகள் நடக்க இருக்கிறது. மொத்தமாக 128 ரயில்நிலையங்கள் இந்த மூன்று வழித்தடங்களிலும் வர இருக்கிறது.
ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கி உள்ளிட்ட நிறுவனங்களின் நிதியுடன் இத்திட்டத்தை செயல்படுத்த உள்ளன. 2026-ல இரண்டாம் கட்ட மெட்ரோ திட்ட பணிகள் நிறைவடையும். இதன் காரணமாக, சென்னையின் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும் , சென்னை பெருநகரின் உள்கட்டமைப்பு மேலும் மேம்படும்.