பஞ்சாபில் பிரதமரின் பாதுகாப்பு குறைபாடு தொடர்பான வழக்கை நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் தேசிய தியாகிகள் நினைவிடத்திற்கு செல்வதற்காக, பதின்டா விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக சென்ற பிரதமர் மோடியின் காரை சிலர் தடுத்து நிறுத்தினர்.
இதனால், சுமார் 20 நிமிடங்கள் வரை பாலத்தில் நின்றிருந்த பிரதமர் மோடி, தனக்கான பாதுகாப்பு குறைபாடு காரணமாக அந்த நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டு மீண்டும் டெல்லி திரும்பினார்.
பிரதமரின் பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக ஆளும் காங்கிரசுக்கும், பாஜகவுக்கும் இடையே சொற்போர் நடந்து வரும் நிலையில், பாதுகாப்பு குளறுபடி தொடர்பாக விசாரிக்க இரண்டு பேர் கொண்ட உயர்நிலை விசாரணைக் குழுவை பஞ்சாப் அரசு அமைத்துள்ளது.
பஞ்சாப் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி மெஹ்தாப் கில், உள்துறை மற்றும் நிதித்துறையின் முதன்மை செயலாளர் அனுராக் வர்மா ஆகியோர் கொண்ட இந்த விசாரணைக்குழு, மூன்று நாட்களில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யும் என்றும் பஞ்சாப் அரசு தெரிவித்துள்ளது.
இதனிடையே, பிரதமரின் பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக மூத்த வழக்கறிஞர் மனீந்தர் சிங் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்தார். இந்த வழக்கு நாளை விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா தெரிவித்துள்ளார்.