தனியார் காப்பகத்தில் ஊழியரை அடித்து கொன்ற மனநலம் பாதித்த இளைஞர்…

திருவெறும்பூர் அருகே உள்ள மனநல காப்பகத்தில் பணிபுரிந்து வந்த ஊழியருக்கும், மனநிலை பாதிக்கப்பட்டவருக்கும் ஏற்பட்ட மோதலில் காப்பக ஊழியர் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவெறும்பூர் அருகே பூலாங்குடி காலனியில் இருந்து பழங்கனாங்குடி செல்லும் சாலையில் கிருபா மனவளர்ச்சி குன்றியோர்களுக்கான காப்பகம் ஒன்று தனியார் பராமரிப்பில் செயல்பட்டு வருகிறது. இந்த காப்பகத்தில் சுமார் பத்து பேர் பராமரிப்பில் உள்ளனர்.

இங்கு, தஞ்சை மாவட்டம் மனையேறிபட்டியை சேர்ந்த 56 வயதான விக்டர்ஞான ஆச்சர்யம் காப்பக ஊழியராக கடந்த ஆறு மாத காலமாக வேலை பார்த்து வருகிறார். கடந்த 9-ம் தேதி தனது பராமரிப்பில் இருந்த கரூர் தளவாய் பாளையத்தை சேர்ந்த அசோக் என்ற மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞரை, கண்டித்ததாகக் கூறப்படுகிறது.

விக்டர்ஞான ஆச்சர்யம் கரண்டியதால் அடித்ததால், ஆத்திரம் அடைந்த அசோக் விக்டர், தண்ணீர் டம்ளரை கொண்டு திருப்பித் தாக்கியதாக தெரிகிறது.

இதில் பலத்த காயமடைந்த விக்டர் ஞான ஆச்சர்யம் மயக்கமடைந்து கீழே விழுந்த நிலையில், அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நவல்பட்டு போலீசார் விக்டர் ஞான ஆச்சர்யத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக மனநலம் பாதிக்கப்பட்ட அசோக்கிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

 

Exit mobile version